ஏற்கனவே நான் எழுதிய கூகுள் க்ரோம்-இல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல்லை எப்படி தெரிந்து கொள்வது என்ற பதிவின் முக்கியமான குறிப்புகளின் பிரதி ஒன்றை கீழே தருகிறேன்.
நாம் கூகுள் க்ரோம் மூலம் பேஸ்புக் அல்லது ஜிமெயில் போன்ற தளங்களுக்கு லொகின் செய்ய எமது கடவுச்சொல்லை டைப் செய்து Enter பட்டன்-ஐ அழுத்தினால் உலாவியின் மேலே வலது மூலையில் கீழ் காட்டியுள்ளவாறு ஒரு வாசகம் தோன்றும்.
இது என்னவென்றால் நாம் லொகின் செய்யும் குறிப்பிட்ட தளத்தினுடைய எமது பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல்லை எமது உலாவியில் சேமித்து வைப்பதற்கான அனுமதியை கேட்கும் வாசகம் ஆகும்.
இவ்வாறு நாம் எமது பயனர் கணக்கு விபரங்களை எமது உலாவியில் சேமித்து வைத்தால் அடுத்த முறை குறிப்பிட்ட பேஸ்புக் தளத்தையோ அல்லது ஜிமெயில் தளத்தையோ எமது கணனியில் இருந்து லொகின் செய்யும் போது பயனர் கணக்கு கடவுச்சொல் போன்ற விபரங்களை டைப் செய்ய தேவையில்லை. அதற்கு பதிலாக குறிப்பிட்ட தளத்தின் URL-ஐ மட்டும் டைப் செய்து லொகின் செய்து கொள்ள முடியும்.
இந்த வசதியை கூகுள் க்ரோம் பயனர்களின் நேரத்தை சேமிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த வசதியை எமக்கு தெரியாமல் மற்றவர்கள் தவறாக பயன்படுத்தி எமது பேஸ்புக் கணக்கின் அல்லது மற்றைய ஏதேனும் ஒரு ஆன்லைன் கணக்கின் கடவுச்சொற்களை தெரிந்து கொள்ள முடியும்.
எவ்வாறு என்றால் நாம் எமது நேரத்தை சேமிப்பதாக நினைத்து கூகுள் க்ரோம்-இல் சேமித்து வைக்கும் கடவுச்சொற்களை மற்றவர்களால் பார்க்க முடியும். எப்படி என்று பார்ப்போம்.
உங்களது கூகுள் க்ரோம் உலாவியை திறவுங்கள்.
அதிலே Settings பகுதிக்கு செல்லுங்கள்.
அங்கே show advanced settings என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அதிலே Password and forms என்று இருப்பதில் Manage password என்பதை கிளிக் செய்யுங்கள்.
இங்கே தான் உங்களுடைய சேமித்து வைக்கப்பட்ட அனைத்து கடவுச்சொற்களும் காணப்படும். இதிலே காட்டப்படிருக்கும் ஏதேனும் ஒரு தளத்தினுடைய பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல்லை குறிப்பிட்ட அந்த தளத்தை கிளிக் செய்து Show என்று இருப்பதை கிளிக் செய்தால் போதும்.
இப்போது உங்களது பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல் போன்றவைகள் துல்லியமாக காட்டப்படும்.
சரி இதே முறையை பயன்படுத்தி பயர்பாக்ஸ் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொற்களை தெரிந்து கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
உங்களது பயர்பாக்ஸ் உலாவியை திறவுங்கள்.
அதிலே Settings-ஐ கிளிக் செய்து Option என்பதை கிளிக் செய்யுங்கள்.
அங்கே Security என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து Show Logins என்பதை கிளிக் செய்யுங்கள்.
இங்கே தான் பயர்பாக்ஸ் உலாவியில் சேமித்து வைக்கப்பட்ட அனைத்து கடவுச்சொற்களும் காணப்படும்.
இதிலே காட்டப்படிருக்கும் ஏதேனும் ஒரு தளத்தினுடைய பயனர் கணக்கு விபரம் மற்றும் கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள குறிப்பிட்ட அந்த தளத்தை கிளிக் செய்து Show Password என்று இருப்பதை கிளிக் செய்தால் போதும்.
ஆகவே இந்த முறையை பயன்படுத்தி உங்களது க்ரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கடவுச்சொல்லை தெரிந்து கொள்ள முடியும்.





