அண்மைய நாட்களில் கூகுள் லூன் என்ற வார்த்தையை அதிகமாக கேட்டு இருப்பீர்கள். ஆம் கூகுள் லூன் திட்டம் வெகு விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. எமது தளத்திலும் கூட இது பற்றிய செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
கூகுள் லூன் என்பது வானத்தில் மிதக்கும் பலூன்-களில் இருந்து இணையத்தை வழங்கும் திட்டம் ஆகும். அதாவது,
லூன் திட்டத்தில், பூமியிலிருந்து 20- கிலோ மீட்டர் உயரத்தில், பெரிய அளவிலான பலூன்கள் பறக்கவிடப்பட்டு, அதில் அமைக்கப்பட்டிருக்கும் இணைய சர்வர்கள் மூலமாக, பலூன்கள் பறக்கும் உயரத்திற்குக் கீழாக வசிக்கும் மக்களுக்கு, இணைய இணைப்பு வழங்கப்படும்.
இந்த பலூன் மற்றும் அதில் அமைக்கப்படும் டிஜிட்டல் சாதனங்களுக்குத் தேவையான மின்சக்தி, சோலார் பேனல் மற்றும் வேகமாக வீசும் காற்றிலிருந்து நாள் முழுவதும் பெறப்படும். இந்த சாதனங்கள், தரையில் உள்ள சாதனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, வலைப்பின்னல்களை உருவாக்கி, இணையம் பயன்படுத்தத் தேவையான டிஜிட்டல் அலைகளை பூமியில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கு அனுப்பும்.
ஒவ்வொரு பலூனும் 4 கி.மீ. விட்ட அளவிலான வட்ட பரப்பளவில், இணைய இணைப்பினை வழங்கும். எல்.டி.இ. என அழைக்கப்படும், 4ஜி தொழில் நுட்பத்திற்கு இணையானது இது. ஒவ்வொரு பலூனும், குறைந்தது ஆறு மாதம் விண் வெளியில் பறந்து செயல்படும் வகையில் அமைக்கப்படும்.
2013 ஆம் ஆண்டே இந்த திட்டத்தை இந்தியாவில் செயற்படுத்த கூகுள் திட்டமிட்டிருந்தது. ஆனால், அப்போது இந்திய அரசின் அனுமதியினைப் பெறுவது சற்று சிரமமானதாக இருந்ததால் இந்த முயற்ச்சி இடை நடுவே விடப்பட்டது.
தற்போது, எந்த தடையும் இன்றி, லூன் திட்டத்தினை அமல்படுத்த அரசின் அனுமதியை, கூகுள் நிறுவனம் பெற்றுவிட்டது.
ஆனால் இப்போது கூகுள் எதிர்கொள்ளும் அடுத்த பிரச்சினை, இந்தியாவில் எந்த மொபைல் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை ஆரம்பிப்பது என்பதாகும்.
Economic Times தளத்தில் வெளிவந்திருக்கும் செய்திப்படி, கூகுள் நிறுவனம் இந்தியாவின் BSNL நிறுவனத்துடன் இந்த திட்டத்தை செயட்படுத்துவதட்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் இந்தியாவின் தலைமை அதிகாரி இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த திட்டத்தை உள்நாட்டு மொபைல் நிறுவனம் ஒன்றின் துணை இன்றி செயற்படுத்த முடியாது எனவும் தாம் இது குறித்து சில உள்நாட்டு மொபைல் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கூகுல் லூன் திட்டம் பற்றி வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கூகுள் லூன் திட்டத்தில் வழங்கப்படும் இன்டர்நெட்-இல் பேஸ்புக் ப்ரீ பேசிக்ஸ் திட்டத்தில் போல் எந்த விதமான இணைய கட்டுப்பாடுகளும் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.
நம் அனைவருக்குமே தெரிந்தது போல், அண்மையில் பேஸ்புக் ப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு இந்திய அரசு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரிந்துரைக்கப்படும் பதிவு
ஆகவே ஏற்கனவே இன்டர்நெட்-இன் சமநிலைத்தன்மை மீறப்படுகிறது என்ற காரணத்தினால் இந்தியாவில் பேஸ்புக் ப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு தடை விதித்து இருப்பதால், கூகுள் நிறுவனம் இவற்றை கருத்திற்கொண்டு லூன் திட்டத்தை செயற்படுத்தும் என எதிர்பார்க்கபடுகிறது.
Tech in Tamil
Internet
Tech News
BSNL மொபைல் நிறுவனத்துடன் இணைகிறதா இந்தியாவின் கூகுள் லூன் திட்டம்?
