பேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்திற்கு தடை விதித்தது இந்திய அரசு

ஒரு வழியாக முடிவுக்கு வந்து இருக்கிறது இந்த பேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம். கடந்த சில நாட்களில் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த இந்த விடயத்துக்கு இந்திய அரசாங்கம் ஒரு முற்றுப்புள்ளியை இப்போது வைத்து இருக்கிறது. இந்த ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்து இருப்பீர்கள். இருந்த போதும் தெரியாத ஒரு சில நெஞ்சங்களுக்காக பேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் என்றால் என்ன? இது ஏன் ஆரம்பிக்கப்பட்டது? இதன் நோக்கம் என்ன? ஏன் இந்த திட்டத்திற்கு இந்திய அரசு தடை வித்தித்திருக்கிறது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

பேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் என்றால் என்ன?

சுருக்கமாக சொன்னால் உலகில் வாழும் அனைத்து அனைத்து மக்களிடமும் இணையத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம். உலகில் வாழும் மொத்த சனத்தொகையில் குறிப்பிட்ட ஒரு சதவீதமான மக்களே இணையத்தை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி இல்லாமல் உலகில் இருக்கும் அனைவருமே இணையத்தை இலவசமாக உபயோகிக்க வேண்டும் என்பதே இவர்களுது நோக்கம். ஆகவே உங்களிடம் ஒரு ஸ்மார்ட் போன் இருக்கும் பட்ச்சத்தில் உங்களால் ஒரு ரூபாய் கூட செலவழிக்காமல் இணையத்தை அணுக முடியும்.

குறிப்பிட்ட இந்த வசதியை ஒவ்வொரு நாட்டினதும் குறிப்பிட்ட சில மொபைல் சேவை நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக மக்களுக்கு வழங்குவதே இந்த பேஸ் புக் ஃப்ரீ பேசிக்ஸ்.


இது ஏன் ஆரம்பிக்கப்பட்டது?

ஏற்கனவே மேலே குறிப்பிட்டது போல உலகில் இருக்கும் அனைவருக்குமே இணையத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்பதற்காகவே இது ஆரம்பிக்கப்பட்டது. உலகில் வாழும் அனைவருமே இணையத்தை உபயோகிக்க முடியாமல் இருப்பதற்கு காரணமாக வருமையை காட்டுகிறார்கள். இதற்காகவே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.

இதன் நோக்கம் என்ன?

வெளித்தோற்றத்திட்கு, உலகில் வாழும் அனைவருக்கும் இலவசமாக இணையத்தை வழங்க வேண்டும் என்று கூறினாலும், இதில் பல்வேறு இலாப நோக்கங்கள் இருக்கிறது.

இந்த திட்டத்தின் முடிவில் எம்மால் கணிக்க கூடிய இலாப நோக்கங்கள்.

இந்த திட்டத்திற்காக கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இலாப நோக்கம் இல்லாமல் இவ்வளவு பணத்தை முதலீடாக்க அவர்கள் முட்டாள்களா? இவ்வளவு பணத்தை முதலீடாக போடுகின்றார்கள் என்றால் இதற்கான காரணம் கூகுளை பின்தள்ளி இணைய பாவனையாளர்கள் மத்தியில் முதல் இடத்தை பிடிப்பதே இதன் நோக்கமாக இருக்கும். உலகில் முதல் இடத்தில் இருக்கும் இணையத்தளம் கூகுள், இரண்டாம் இடத்தில் இருக்கும் இணையத்தளம் பேஸ்புக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாரிப்பது. இந்த திட்டம் வெற்றியடையும் பட்ச்சத்தில் கோடிக்கணக்கான மக்கள் இந்த சேவையை உபயோகிக்க தொடங்குவார்கள். இதன் முடிவில், பேஸ்  புக்  ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம் மூலம் கோடிக்கணக்கான பணத்தை சம்பாரிக்கலாம்.

ஏன் இந்த திட்டத்திற்கு இந்திய அரசு தடை விதித்தது?

எல்லாமே இலவசமாக கிடைக்க போகிறது என்ற ஆர்வத்தில் அனைவருமே ஆரம்பத்தில் இந்த திட்டத்தை ஆதரிக்க தொடங்கினார்கள். ஆனால் நாட்கள் நகரும் போது தான் இந்த திட்டத்தை பற்றிய பூரண அறிவை மக்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

இணைய பாவனையாளர்கள் இந்த திட்டத்தை எதிர்க்க காரணம் என்ன?

இதற்கு முக்கிய காரணம், இந்த திட்டத்தின் மூலம் இணைய சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இந்த ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தில் அனைத்து தளங்களுமே இலவசம் கிடையாது. அவர்கள் குறிப்பிடும் ஒரு சில தளங்கள் மட்டுமே இலவசமாக கிடைக்கும். அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது இந்த பேஸ்புக். ஆகவே வரும் காலத்தில், நாம் இன்று இலவசமாக செல்ல கூடிய தளங்களை கூட பணம் செலுத்தி பார்க்க வேண்டிய நிலை உருவாகலாம்.

இணையம் என்பது மின்சாரம் மாதிரி. அது கட்டுப்பாடுகள் இன்றி இருக்க வேண்டும். ‘நான் கொடுக்கும் மின்சாரத்தில் லைட் எரியாது... ஃபேன் மட்டும் தான் ஓடும். அதுவும் நான் சொல்கிற குறிப்பிட்ட கம்பெனி ஃபேன் மட்டும்தான் ஓடும்’ எனக் கட்டுப்படுத்துவது மாதிரிதான் வரும்காலத்தில் அமையப்போகிறது இந்த ஃப்ரீ பேசிக்ஸ். இதை கருத்திற்கொண்டே பல்வேறு தரப்பினர் இந்த திட்டத்தை எதிர்த்து வந்தனர். இவை அனைத்தையும் பரிசீலித்த இந்திய அரசு தற்போது இந்த திட்டத்திற்கு தற்காலிக தடையை விதித்து இருக்கிறது.